Tuesday, August 23, 2005

 

சொர்ணமால்யாவின் சோகக்கதை

என்னைப் போல்யாரும்
கஷ்டப்பட்டிருக்க மாட்டாங்க!
இன்று நாம் பண்பாட்டைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், அந்தப் பண்பாட்டைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதில்லை.

பண்பாட்டைக் கற்றுத் தருவது என்றால் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருப்பது அல்ல. மொத்த உடம்பும் மறைகிற மாதிரிதான் பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்கள் என்றால் சிகரெட் பிடிக்கக் கூடாது. மது குடிக்கக் கூடாது என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்டிஷன் போட்டுக் கொண்டிருப்பதல்ல பண்பாடு.

ஸ்லீவ்லஸ் பிளவுஸ் போட்டுக் கொள்வதற்கும் பண்பாட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிகரெட் பிடிப்பதற்கும் பண்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களைப் பல இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நம் வீட்டுக் குழந்தைகளை இன்டர்நெட் பார்க்காதே என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். மனிதன் எப்போதுமே தவறுகளைத்தான் முதலில் செய்கிறான். புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அந்த மொழியில் உள்ள கெட்ட வார்த்தைகளைத்தான் முதலில் கற்றுக் கொள்கிறோம். ஆனால், அதோடு யாரும் நின்றுவிடுவதில்லை. அடுத்து நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறோம்.

டி.வி., இன்டர்நெட், செல்போன் என்று உலகமே உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்ட இந்தக் கால கட்டத்தில் எஃப் டி.வி பார்க்காதே, குட்டைப் பாவாடை போடாதே, காதில் வளையத்தை மாட்டிக் கொள்ளாதே என்றெல்லாம் நாம் சொல்லக் கூடாது. அப்படியே சொன்னாலும் அவர்களால் அதுபடி நடக்கவும் முடியாது. அப்படி நடப்பது இயற்கைக்கு எதிராக நடக்கிற மாதிரி, தகாத விளைவுதான் ஏற்படுத்தும். பண்பாடு என்பது, என்னவென்று தெரிந்துகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளுவதல்ல. எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு, அந்த விஷயம் நமக்குச் சரிப்பட்டு வருமா? எந்த அளவுக்கு அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்பதை நன்றாக யோசித்து அதன்படி நடப்பது.

இன்றைய தேதியில் நம்முடைய பெற்றோருக்கு, முக்கியமாக பெண்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு, மிகப் பெரிய அதிர்ச்சியாக இருப்பது ‘டேட்டிங்’. டேட்டிங் என்றாலே அது என்னவென்றுகூட புரிந்து கொள்ளாமல் பயத்தில் நடுங்கி, கோபத்தில் கொந்தளித்து, கரித்துக் கொட்டுகிறார்கள். டேட்டிங் என்பது ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் ஒரு ஹோட்டலுக்கோ அல்லது பார்க்கிற்கோ சென்று பேசிக் கொண்டிருப்பதுதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு இந்த டேட்டிங் நிச்சயம் பயன்படும். எனவே, அதை வெறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், டேட்டிங் என்கிற பெயரில் யார் கூப்பிட்டால் போகலாம்? எந்தெந்த இடத்துக்குப் போகலாம்? எந்த அளவுக்கு பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் சகிக்கலாம்? ஏதாவது பிரச்னை என்றால் எப்படி சமாளிப்பது? என்கிற மாதிரியான விஷயங்களை மனம் திறந்து அக்கறையோடு எடுத்துச் சொல்லலாம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்லப்படும் அட்வைஸ்களை விட நட்பு ரீதியில் விளக்கிச் சொல்வதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

தண்ணீரைக் கண்டாலே ஒதுங்கி விடு என்று சொல்வதை விட நீச்சலடிக்கக் கற்றுக் கொடுப்பது புத்திசாலித்தனம். அது சரி, அம்மா, அப்பாவே டேட்டிங் பற்றி எப்படிச் சொல்வது? எனவே, அந்த விஷயமே வேண்டாம் என்று சொல்வது திருட்டுத்தனங்களுக்குத்தான் வழி வகுக்கும். உங்கள் மகனை டேட்டிங்கிற்கு போகவே கூடாது என்று சொன்னால் அவன் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக போக நிச்சயம் வாய்ப்புண்டு.

நண்பர்கள் போல எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி என்னை வளர்த்தார்கள் என்னுடைய பெற்றோர்கள். அதனால்தான் அடுத்தடுத்து இரண்டு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட போதும் உடைந்து போய்விடாமல், வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடிந்தது. என்னை மாதிரி மிகக் குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை யாரும் கண்டிருக்கவும் முடியாது. இருபத்தோரு வயதில் இவ்வளவு கஷ்டமும் அனுபவித்திருக்கவும் முடியாது. ‘நான் இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நீ நினைச்சியாம்மா?’ என்று ஒருமுறை என் அம்மாவிடம் கேட்டேன். ‘எந்த அம்மாவாவது தன் குழந்தை கஷ்டப்படப் போகிறாள் என்று நினைப்பாளா?’ என்று கேட்டார். பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காததைச் சரி செய்யப் பார்த்தோம். முடியவில்லை. பிடிக்காத வாழ்க்கையை பொறுத்துக் கொண்டு வாழ்வதை விட, வேண்டாம் என்று ஒதுங்கி விட்டோம். இதற்காக வீட்டில் யாரும் என்னைக் குறை சொல்லவில்லை. காரணம், அவர்கள் என்னை சரியாகவே வளர்த்திருக்கிறார்கள். நானும் சரியாகத்தான் வளர்ந்திருக்கிறேன். இன்று வரை நன்றாக யோசித்து என் பண்பாட்டுக்கு சரியென்று பட்டதை மட்டுமே செய்கிறேன்.
நன்றி :குமுதம் 17/8/2005


Comments:
கொழந்தே நன்னா இருக்கியோன்னோ...ஆத்தில எல்லாரும் சௌக்கியமா இருக்காளோல்லியோ
சிக்கல் சண்முகசுந்தரம்
 
என்ன சிக்கலாரே...சௌக்கியமா இருக்கீயளா???மோகனாங்கி எப்படி இருக்காக...எங்கள எல்லாம் மறந்துட்டீயளா?
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது